கனகதாரா ஸ்தோத்ரம் - உமாஸ்ரீதாஸன் உரை
அறிமுகம்
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீதேவியிடம் செல்வம் வேண்டி பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் சங்கரர்.
ஸ்ரீதேவி தத்துவம், எல்லா ஜீவராசிகளுடைய உடலையும் மனத்தையும் நெஞ்சையும் இயக்கும் ஜீவசக்தியைக் குறிப்பிடுகிறது. எனினும், ஸ்ரீதேவியை இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்கும் பகவானின் சக்தியாக வழிபடவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.
ஸ்ரீதேவியின் இவ்விரு தன்மைகளையும் சங்கரர் மிக நேர்த்தியாக இந்த ஸ்தோத்திரத்தில் பாடியிருக்கிறார் - சங்கரரைத் தவிர்த்து வேறு யார் இப்படி பாசுரமிட இயலும்?
இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்: கவிஞர் கண்ணதாசன். சமஸ்கிருத மூல சுலோகங்களின் பொருளை, பன்னிரு சீர் விருத்தப் பாடல்களாக கவிஞர் மிக அழகாக தமிழில் பாடியிருக்கிறார். இதிகாச புராணங்களின் பொருள் புரிந்து அவற்றைத் தமிழ்க் கவிதைகளாகப் படைப்பதில், கவிஞரை ஒப்பாரும் மிக்காரும் என்றும் இலர்.
பாடல்கள்
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்,
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்.
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழியி ரண்டை
மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன், கண்வைப்பாய் கமலத் தாயே! (1)
நீலமா மலரைப் பார்த்து நிலையிலா தலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமா நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு,
கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று.
ஏலவார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின், ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன், அருள்செய்வாய் கமலத் தாயே! (2)
நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப்பார்த் தாலும்
நாணத்தால் முகம்பு தைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்,
பற்பல நினைத்த போதும் பாதிக்கண் திறந்து மூடி
பரம்பரைப் பெருமை காப்பார், பாற்கடல் அமுதே! நீயும்
அற்புத விழிக ளாலே அச்சுத முகுந்தன் மேனி
அப்படிக் காண்ப துண்டு, ஆனந்தம் கொள்வ துண்டு,
இப்பொழு தந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே!
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே! (3)
மதுயெனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீல மாலை அன்னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந் தோறும் ஆனந்தம் கொள்வ துண்டு,
பதுமநேர் முகத்தி னாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பார்கடல் மயக்கும் கண்ணை, பதியின்மேல் பாய்ந்த கண்ணை
பேர்த்தெடுத் தென்மேல் வைத்தால் பிழைப்பன்யான் அருள்செய் வாயே!
பேரருள் ஒருங்கே கொண்ட பிழையிலாக் கமலத் தாயே! (4)
கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்ன தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று,
மயங்குவன் திருமால், பின்னர் மகிழ்வன்,நின் விழிதா னென்று.
செய்தவப் பிருகு வம்ச சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!
கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயே,
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமா கமலத் தாயே! (5)
போரினில் அரக்கர் கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்கு வித்த வாளெது கமல நங்காய்?
மங்கையின் விழிகள் அன்றோ? மாலவன் தன்னை வென்ற
தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்ட தாலே
திருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ?
கூரிய விழியாய்! உந்தன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன், கொடுத்தருள் கமலத் தாயே! (6)
மந்திரம் உரைத்தால் போதும், மலரடி தொழுதால் போதும்,
மாந்தருக் கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்.
சந்திர வதனி கண்கள் சாடையில் பார்த்தால் போதும்,
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்க மாகும்,
எந்தவோர் பதவி வேட்டேன், எளியனுக் கருள் செய்வாயே,
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே! (7)
எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்ம சாந்தி?
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி?
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும்,
தவமெனும் முயற்சி யாலே பவவினை தணிந்து போகும்,
அத்தனை முயற்சி என்ன? அண்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும், அகம்புறம் முக்தி யாகும்.
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே?
இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே. (8)
நீருண்ட மேகக் கண்கள், நிழலுண்ட கரிய கூந்தல்,
நேர்கொண்ட மாந்தர் வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்,
சீர்கொண்ட அமுதச் செல்வி! சில்லென்ற காற்று பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வ தைப்போல்
வேர்கொண்ட பாவ மேனும் வினைகொண்ட பாவ மேனும்
வேய்கொண்ட தோளி னாய்உன் விழிகண்டால் தீர்ந்து போகும்.
தேர்கொண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவி யாலே
திருவருள் செய்வாய் நீயே, தேப்பெரும் கமலத்தாயே! (9)
ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!
அன்னவன் தோளில் நீயே, அனைத்துமாய் விளங்கும் சக்தி!
ஆக்கலில் வாணி யாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்,
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்.
தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழு லோகம் திருவருள் புரிந்து நிற்பாய்.
வாக்குயர் கமலச் செல்வி! வாடைநீ, தென்றல் நீயே!
வளமென இரப்போர்க் கெல்லாம் வந்தருள் புரிகின் றாயே. (10)
வேதத்தின் விளைவே போற்றி! வினைப்பயன் விளைப்பாய் போற்றி!
சீதத்தா மரையே போற்றி! செம்மைசேர் அழகே போற்றி!
கோதைப்பண் புடையாய் போற்றி! குளிர்ந்தமா மழையே போற்றி!
ஓர்தத்து வத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி!
பாதத்தைக் கமலம் தாங்க, பல்லுயிர் காப்பாய் போற்றி!
நாதத்து நெடியோன் கொண்ட நங்கைநீ போற்றி! போற்றி!
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி! போற்றி!
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி! போற்றி! (11)
அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி!
அலைகடல் அமுத மாக அவதரித் தெழுந்தாய் போற்றி!
குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி!
குளிர்ந்தமா மதியி னோடும் குடிவந்த உறவே போற்றி!
மன்றத்து வேங்க டேசன் மனங்கவர் மலரே போற்றி!
மாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி!
என்றைக்கும் நீங்கா தாக இருக்கின்ற திருவே போற்றி!
எளியவன் வணங்கு கின்றேன் இன்னருள் போற்றி! போற்றி! (12)
தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி!
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி!
தாமரை கரத்தில் ஏந்தி தவமென நிற்பாய் போற்றி!
தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி!
தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி!
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி!
தாள்,மறை நாணும் வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி! (13)
பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!
தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி!
சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!
பக்தருக் கருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி! (14)
கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!
மண்டல இயக்கத் திற்கே மந்திரம் ஆனாய் போற்றி!
விண்ணவர் வணங்கும் தேவி! விந்தையின் மூலம் போற்றி!
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி! (15)
மைவழிக் குவளைக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி!
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி!
மெய்விழி செவிவாய் நாசி விழைத்திடும் இன்பம் போற்றி!
விரிந்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி!
கைநிறை செல்வம் யாவும் கடைக்கண்ணால் அருள்வாய் போற்றி!
காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி!
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி!
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி! போற்றி! (16)
மோகனன் துணையே போற்றி! முழுநில வடிவே போற்றி!
மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி!
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி!
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி!
ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி!
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி!
தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி!
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி! போற்றி! (17)
கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!
பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!
பணிபவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!
வேயிரு தோளி சக்தி விரித்தருள் போற்றி! போற்றி! (18)
மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீ ராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி
தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப் பளிங்கின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!
அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்கு கின்றேன்! (19)
பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதல் செல்வீ!
ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான்
இவனுனை இரந்து நிற்க இதுவொரு நியாயம் போதும்,
தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோ தாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! (20)
முப்புவி ஈன்ற தாயே! மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண் டொன்றாய் வந்த பிரம்மத்தின் மொத்த மாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்ப சோதி!
ஆனந்த தெய்வ மாதா! அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;
நற்பெரும் பேறும் கிட்டும், நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை.
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதல் செல்வீ!
ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையான் ஒருவ னேதான்
இவனுனை இரந்து நிற்க இதுவொரு நியாயம் போதும்,
தாவுநீர்க் கடலைப் போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோ தாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி! (20)
முப்புவி ஈன்ற தாயே! மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண் டொன்றாய் வந்த பிரம்மத்தின் மொத்த மாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்ப சோதி!
ஆனந்த தெய்வ மாதா! அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழு துரைத்த பாடல் எவரெங்கு பாடி னாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;
நற்பெரும் பேறும் கிட்டும், நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை.
*****
Comments
Post a Comment